Impressions

மிருதங்க வித்வான், ஸ்ரீமுஷ்ணம் V. ராஜாராவ் அவர்களின் உமையாள்புரம் சிவராமன் பொன்விழா வாழ்த்து கட்டுரை

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய பத்மஸ்ரீ உமையாள்புரம் சிவராமன் சார் அவர்களின் ஐம்பது வருட மிகச் சிறந்த கலைச் சேவையை பாராட்டி, இவருடைய 60வது வயது பிறந்தநாளையும் ஒட்டி பாராட்டும் வகையில் மிகவும் சிறந்த முறையில் விழா நடத்த ஏற்பாடு செய்துள்ள பத்மஸ்ரீ உமையாள்புரம் K. சிவராமன் பொன்விழா பாராட்டுக்குடு அங்கத்தினர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்ரீமான் உமையாள்புரம் சார் அவர்களைப்பற்றி எனக்கு தெரிந்தவைகளை ஒரு கட்டுரை வடிவில் எழுதித்தருமாறு கேட்டுக் கொண்டதை, எனக்குக் கிடைத்துள்ள பெரும்பாக்யமாய் ஏற்று இந்த பொன்விழா கமிட்டியாளர்களுக்கு என்னுடைய வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இவ்விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற எல்லாம் வல்ல இறைவனை அருள்புரிய வேண்டுகிறேன்.

ஆடல் அரசரான நடராஜர் இதிகாசத்தில் “லயசிவம்” என்று பெயர் பெற்று இவரே மந்திர மூர்த்தியாய் விளங்கும் போது “சதாசிவம்” என்றும் பெயர் பெறுகிறார். அதுபோல இன்று கர்நாடக சங்கீத இசை உலகில் அரசராகவும், மந்திரமூர்த்தியாயும், மிருதங்கத்தில் ஒரு பெரிய சிகரமான ஸ்தானத்தை அடைந்து பிரகாசமாக விளங்குபவர் மாபெரும் மிருதங்க மேதையாகிய நமது மதிப்பிற்குரிய உமையாள்புரம் சிவராமன் சார் என்பதில் சிறிதளவு கூட ஐயமில்லை.

ஸ்ரீமான் உமையாள்புரம் சார் அவர்களிடம் எனக்கு நெருங்கிய பழக்கமும், பக்தியும் உண்டு. இவர் பெயரைச் சொல்லும்போது இவரை ஈன்றெடுத்த தெய்வமாகிய மதிப்பிற்குரிய ப்ரம்மஸ்ரீ காசி டாக்டர் அவர்களை நினைத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. ப்ரம்மஸ்ரீ டாக்டர் அவர்களின் சங்கீத ஞானம் மிகவும் உயர்ந்தவகை. அத்துடன் அவருடைய எதிர்பார்ப்பும் அவருடைய ஞானத்தை விட உயர்ந்தவகை. டாக்டர் அவர்களின் சங்கீத நினைவுகள், உயர்ந்த எண்ணங்கள், ஒழுக்கம், பராமரிப்பு இவைகள் அனைத்திலும் செயல்முறையில் செயலாக்கி வெற்றி பெற்று உருவாக்கி அளித்துள்ள மாபெரும் மிருதங்க மேதைதான் இன்று எல்லோராலும் அழைக்கப்படும் பத்மஸ்ரீ உமையாள்புரம் சிவராமன் அவர்கள்.

இவருடைய மிருதங்க வாசிப்பில் மயங்காதவர்கள் இருக்கமுடியாது. இவர் மிகவும் எளிமையாக பழகுபவர். பெரிய உள்ளம் படைத்தவர். இவ்வளவு பெரிய மேதையாக இருக்கிறோமே என்ற தற்புகழ்ச்சி ஒரு நாளும் இல்லாதவர் என்பது மிகவும் விசேஷமான அம்சம். அனைத்து சக வித்வான்களிடம் நல்ல மதிப்பும் பிரியமும் கொண்டவர். ஆனால் சுபாவத்திலேயே இந்த எண்ணங்களை வெளியார்களுக்கு புரியும் வகையில் வெளிக்காட்டி கொள்ள மாட்டார். மேடையில் தன்னுடன் வாசிக்கும் சக வித்வான்களை நன்றாக உற்சாகப்படுத்தி, மேடையில் அவர்களைக் காட்டிக் கொடுக்காமலும், சோதனையில் ஆழ்த்தாமலும் அவர்களை பிரமாதமாக வாசிக்க வைத்து அவர்களை மகிழ்விப்பதோடு, தானும் மகிழ்ச்சியாய் ரசிகர்களை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தி விடுவார். 25 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் என்னுடைய மாமாவாகிய “ஷாப்” ராகவேந்திரராவ் அவர்கள் வீட்டு விசேஷத்தில் நடந்த பத்மஸ்ரீ Dr. N. ரமணி அவர்களின் கச்சேரியில் இவர் வாசித்த வாசிப்பைக் கேட்டு மிருதங்கத்தில் வெறி வந்தது. அதே போல் இவர் போல் வாசிக்க முடியாது என்றும் நினைத்தேன். அந்த நாள், இன்றும் என் மனதை விட்டு அகலவில்லை. கும்பகோணத்தில் உள்ளவர்களுக்கு இன்றும் அந்த கச்சேரியை நினைவில் கொண்டு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அன்று கச்சேரி முடிந்ததும் இவர் வாசித்ததை கேட்ட சங்கீத விற்பன்னர்கள், மேதைகள், ரசிகர்கள் பலரும் இவரை மிகவும் பாராட்டி, பிரமித்ததுடன் இவருக்கு வாசிப்பில் சித்தி கிடைத்துவிட்டது. அதனால்தான் இப்படி வாசிக்கிறார் என்று அனைவரும் பேசிக் கொண்டதை எந்நாளும் மறவேன்.

இவருடைய சிறந்த அம்சமாக விளங்குவது இவருக்கு ஸதா மிருதங்கத்தை தவிர்த்து வேறு யோஜனை கிடையாது. மற்றைய அலுவல்கள் ஆனாலும் சரி, குடும்பம் என்ற விஷயமானாலும் இரண்டாவது தான். கச்சேரி தினத்தன்று வாத்யம் பார்க்க ஆரம்பித்தால் காலையிலிருந்து மூன்று நான்கு முறையேனும் சரிபார்ப்பார். பார்த்துக்கொண்டே இருப்பார். திருப்தி என்பதை எளிதியில் அடைய மாட்டார். ஆனால் திருப்திவரும் வரையில் அதே மூச்சாக இருப்பார். இப்படிப் பார்த்து வாத்யம் கொண்டு வந்து மேடையில் அவர் வாசிக்க ஆரம்பித்ததும் வாத்யம் இவர் சொல்வதுபோல் கேட்கும் என்பது எல்லா வித்வான்களும் அறிந்த உண்மை. அதோடு “அசுரசாதகி” என்ற பெயரை இவர் அடைந்ததின் பயனால் அப்பயனை நாமெல்லாம் கண்டு, கேட்டு மகிழ்கிறோம். சாட்சாத் பகவான் இவருடைய கைவிரல்களை மிருதங்கம் வாசிப்பதற்கென்றே படைத்து விட்டார் போலும். இவர் வாசிக்கும்போது அதில் மிகவும் உயர்ந்த பாணி, நாதம், மீட்டு சொற்கள், விசேஷமான அரைசாப்பு, குமுக்கி, பொடிச்சொற்கள், குமுக்கியுடன் சேர்ந்த பரண்கள் அனைத்துடனும், பாடகர்களின் காலப்பிரமாணத்திற்கேற்ப சமயத்திற்கேற்ப அளவோடு எப்படி இருக்கவேண்டுமோ அந்த அளவில் எந்த காலப்பிரமாணமாக இருந்தாலும் அந்தந்த காலப்பிரமாணத்திற்கு அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக லாவகத்துடன் சிவார்ப்பணமாக வாசித்து கச்சேரியை பரிமளிக்கச் செய்வது. ஒரு சமயம் சாட்சாத் சிவபெருமான் காதில்விழ அவர் மகிழ்ந்து. நெகிழ்ந்து நந்திதேவரை அழைத்து மிருதங்கத்திற்கு உண்டான பூர்ண அனுக்ரக சக்தியை இவருக்கு அளிக்குமபடி வேண்டிக்கொண்டார் போலும் என்று தோன்றுகிறது. மேலும் இவர் தன்னுடைய இஷ்ட தெய்வத்தின் பூர்ண அனுக்ரகத்தையும் பெற்றதோடு, பழம்பெரும் வித்வான்களின் பரிபூர்ண ஆசிகளையும் பெற்றதாலும் சாதகமுறையில் அநேக யுக்திகளையும் கையாண்டு அதில் வெற்றியும் கண்டு அதன் பயனால் இன்றும் இவர் வாசிக்கும் போது பழங்காலத்திய மிருதங்க மாமேதைகள் கையாண்ட முறைகளை பின்பற்றி, அதே சமயத்தில் தன்னுடையது என்று இருக்கும் புதிய முறைகளையும் மாற்றங்களையும் கற்பனைகளையும் அதில் புகுத்தி தனக்கென்றே ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு இசை உலகில் ஒரு பெரிய ஸ்தானத்துடன் மிகவும் பிரகாசமாய் இருப்பது நமது நாட்டிற்கும், அதோடு மற்றைய சக வித்வான்களுக்கும் பெருமையை அளிக்கும் விஷயம்.

இவருக்கு எங்கு சென்றாலும் நிறைய ரசிகர்கள் கூட்டம். எல்லா ஊர்களிலும் உள்ள ரசிகர்கள் இவர் வழியை பின்பற்றி வாசிக்க ஆவலுடன் உள்ளவர்கள் ஏராளம். மிருதங்கக் கலையில் உள்ள இளையதலை முறைகள் இவருடைய வாசிப்பை கச்சேரிகளில் நிறைய கேட்டு எல்லாவிதமான நல்ல அம்சங்களையும் எடுத்துக்கொண்டு அதை பின்பற்றி பயனடைய வேண்டும் என்பது என்னுடைய அவா.

ஸ்ரீமான் சார் அவர்களின் வயது மட்டும் தான் அறுபதை எட்டிப்பார்க்குமே தவிர இன்னும் அறுபதானாலும் வாசிப்பில் மட்டும் எப்போதும் இளமைதான். அதில் துளிகூட சந்தேகமில்லை. காரணம் அவர் வந்துள்ள மிருதங்க பரம்பரை வழி அப்படிப் பட்ட வழியாகும். பெரிய மேதைகள் எல்லாம் அநேகமாக சில நேரங்களைத் தவிர எந்த நேரத்திலும் ஏதோ ஒரு யோசனையில் இருப்பார்கள். அவர்களுடைய சிந்தனை அவர்களுடைய கலையை ஒட்டியே இருக்கும். நம்முடன் பேசிக்கொண்டு இருப்பதுபோல இருந்தாலும் யோசனை வேறு இடத்தில் அவர்களுடைய கலை உணர்ச்சியில் ஆழ்ந்து கொண்டிருக்கும். இது அநேகமாக பார்க்கிறவர்களுக்கு சற்று வித்யாசமாகவும் பேசிக்கொண்டிருக்கும்போது நம்மிடத்தில் அவ்வளவு சௌலப்பியமாக இல்லையே என்று தோன்றும். இது மேதைகளுக்கே உண்டான விஷயம்தான். அதனால் மேதை அப்படித்தான் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே இவரைப் போன்ற மேதைகள் அவர்கள் எந்த நேரத்தில் சௌலப்பியமாக இருக்க நினைக்கிறார்களோ, அந்த நேரத்தைதான் நாம் எதிர்பார்த்து இருக்க வேண்டும். இவர் மிருதங்கத்தின் மீது வைத்துள்ள பக்தியும், மிருதங்க வாத்யம் இவர்மீது கொண்டுள்ள அகலாத அன்பும் இவரை என்றுமே இக்கலையில் கீர்த்தியுடன் பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழவைக்கட்டும் என்று என்றுடைய அந்தர்யாமியான குருஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளையும், ஹயக்ரீவ ஸ்வாமிகளையும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

(Article written on Dr. Umayalpuram K Sivaraman’s completion of 50 Years of service to Carnatic Music)

Related