மிருதங்கம் உமையாள்புரம் திரு. சிவராமன் அவர்களை எனக்கு சுமார் 40 வருடங்களாகத் தெரியும்.
கையில் சுநாதம், வாசிப்பில் விவரம், லயத்தில் – சௌக்கியம் விவகாரம், தனி வாசிப்பதில் அளவு, சமயோசிதம் இவை எல்லம் இவரது வாசிப்பிலுள்ள விஷேங்கள்.
என் குருகுலவாசத்தில், கும்பகோணத்தில் என் குருநாதர் அவர்களைக் காண, இவர் தன் தந்தையாருடன் வந்து, என் குருநாதரிடம் ஆசி பெற்றது எனக்கு ஞாபகம் வருகிறது.
பாலக்காடு மணி அய்யர் அவர்கள் சொல்வார்கள், “ஐயங்கார்வாள் பாட்டுக்கு வாசிக்கத் தெரிந்து விட்டால் வேறு எந்தப் பாட்டுக்கும் வாசிப்பதில் சிரமமே இல்லை” என்று, இது மணி அய்யர் அவர்கள் உணர்ந்து சொன்னது. சிவராமனுக்கு என் குருநாதர் அரியக்குடி அவர்களுடைய தொடர்பு ஏற்பட்டதினால் வாசிப்பில் பல நன்மைகள் இவருக்குக் கிடைத்தது.
B.A., B.L., படிப்பு படித்திருந்தும் மிருதங்கத்தையே தொழிலாக அமைத்துக் கொண்டது லய உலகிற்கு, ஒரு உயர்ந்த லய வாத்திய இசைக் கலைஞரைக் கொடுத்திருக்கிறது. வாத்தியங்களை அன்றாடம் சரிபார்த்துக் கொள்வதில் மிகப்பொறுப்புள்ளவர்.
திருவனந்தபுரம் நவராத்திரி மண்டபத்தில் தவறாது வாசித்து வருபவர். பாலசில் காலஞ்சென்ற அம்ம மகாராணி அவர்களுக்கு சிவராமன் வாசிப்பில் மிகுந்த பற்று உண்டு.
லய உலகிற்கு இவருடைய சேவை மிக முக்கியம். நிறைய சிஷ்யர்கள் உண்டு. இவர் புதல்வர் ஸ்வாமிநாதனும் நன்றாக வாசிப்பவர். இவ்வளவுக்கும் காரணம் இவருடைய தந்தையார் டாக்டர் காசி விஸ்வநாதய்யர் அவர்கள்தான்.
மிருதங்க மேதை உமையாள்புரம் சிவராமன் 60 வயதை எட்டியிக்கிறார். இவர் பல்லாண்டு வாழ்ந்து, இசை உலகிற்குப் பல சேவைகள் செய்ய ஸ்ரீ தியாகபிரும்மம் இவருக்கு அருள் பாலிக்க வேணுமாய் பிரார்த்திக்கிறேன்.
என்னுடைய வாழ்த்துக்கள்
K.V. நாராயண ஸ்வாமி
(Article written on Dr. Umayalpuram K Sivaraman’s completion of 50 Years of service to Carnatic Music)