Impressions

சாதனையின் சிகரம் உழைப்பின் மேன்மை – கல்லிடைக்குறிச்சி மஹாதேவ பாகவதர்

1955ம் வருடம் சுமார் 19 முதல் 20 வயதிருக்கும் சிவராமனுக்கு அப்போது B.L. பட்டப்படிப்பிற்காக சென்னை வந்தான். மயிலை நாட்டு சுப்பராய முதலி தெருவில் இருந்து அவன் சித்தப்பா M.S. ஸ்ரீனிவாச அய்யர் அவர்கள் வீட்டில் வந்து தங்கினான் நேர் எதிர்வீட்டில் நானும் புல்லாங்குழல் ரமணியும் குடியிருந்தோம். சிவராமன் அப்போது படித்துக் கொண்டே கச்சேரிகளும் வாசித்து வந்தான். ரமணி ஒரு நாள் என்னிடம், எதிர்வீட்டில் சிவராமன் என்ற ஒரு பையன் கும்பகோணத்தில் இருந்து வந்துள்ளான், நாம் செல்வோம் எனக் கூறினார். அவன் மிருதங்கம் வாசிப்பதைக் கேட்ட எனக்கு அவன் பெரிய வித்வானாக வரக்கூடிய கை அமைப்பு, யோக்யதை இருந்ததை அறிய முடிந்தது. அன்று தொடங்கியது கிட்டதட்ட 10 வருட கால அசுரசாதகம், எப்போதும் சாதகம் செய்வதிலேயே குறியாக இருந்தான். சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் போக எந்நேரமும் சாதகம்தான். இப்படி இரண்டு, மூன்று வருடங்கள் கழிந்தன. தமிழில் “சுயம் காரியப்புலி” என்பார்கள். சிவராமன் அந்த வகை. காலை 5 மணிக்கு மிருதங்க வாத்யத்தைத் தோளில் சுமந்து என் வீட்டுக்கு வருவான். அப்போது நான் கிணற்றில் நீர் இறைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருப்பேன். என்னுடன் இந்த வேலைகளில் சிவராமனும் பங்கேற்று வேலைகள் சீக்கிரம் முடிய உதவி செய்து, சுமார் காலை 5.30 மணிக்கு நான் பாட ஆரம்பித்து சாதகம் 7.30 மணிவரை நடைபெறும், அப்புறம் 8.30 மணி முதல் 11 மணி வரை. மதியம் 2.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை. சில சந்தர்ப்பங்களில் இரவு சாப்பாட்டிற்குப் பிறகும் சாதகம் தொடரும். மிருதங்கம் சாதகம் செய்பவர்களுக்கு குடியிருக்கக் கூட வீடு கொடுக்கத் தயங்குவார்கள். ஆனால், சிவராமனுக்கு தெய்வாதீனமாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அணுசரணையாக இருந்தார்கள். அவன் கச்சேரிகள் செல்லும் சமயம் வீட்டில் சாதகம் நடைபெறாதபோது பக்கத்தில் உள்ள குடிசைவாசிகள் கூட “ஏன் நேற்று மிருதங்க சப்தம் கேட்கவில்லை” என்று கேட்பார்கள்.

சாதகத்தில் கீர்த்தனைகள் நிறைய பாடும் வழக்கம் உண்டு, வர்ண சாதகம் வயலினுக்கு விசேஷம். ஆனால் மிருதங்கத்திற்கு நிறைய கீர்த்தனை சாதகம் அவசியம். காலப்ரமாணம் இரண்டும் கெட்டானாக இருக்கும். அதை எழுத்தில் வடிப்பது கடினம். ஏதாவது தப்பு நேர்ந்தால் திரும்பத்திரும்ப அதையே வாசித்து சரியாக வரும்வரை விடமாட்டான் சிவராமன். அது சரியாக வந்தால்தான் மேலே போகும் வழக்கம். நிறைய பல்லவிகள் பாடும் வழக்கமும் உண்டு. நிறைய சமயம் 4 களை சவுக்கப்பல்லவிதான். காலப்ரமாணம் கிட்டதட்ட 8 களையாக இருக்கும். அஷரங்களில் களையை காண்பிக்காமல் ஊமையாகப் போட்டுப் பாடுவதுதான் வழக்கும். அதை நன்றாக நிர்வகித்து வாசிப்பான். இது இல்லாதநாளே கிடையாது. இதில் தனி ஆவர்த்தனமும் உண்டு. தனியில் சதுச்ரம், திச்ரம், மிச்ரம், கண்டம், ஸங்கீர்ணம் ஆகிய 5 நடைகளையும் விந்நியாசப்படுத்தி வாசித்து ஒவ்வொரு நடையில் பெரிய கோர்வைகள் வைத்து பிறகு மறுபடியும். சதுச்ர நடைக்கு வந்து கோர்வைகள் வைத்து முடிக்க குறைந்தது 1 மணிநேரம் ஆகும். இப்படி வாரத்திற்கு இரண்டுமுறை வாசிப்பது உண்டு. இது தவிர கீர்த்தனைகள் 3 காலம் பாடி பத, லய, விந்நியாசங்கள் செய்து, இவை அவ்வளவிற்கும் வாசித்தவன் சிவராமன். பழைய நாள் பல்லவிகள் 4 களையில்தான் அமைத்துப் பாடுவார்கள், காரணம், எடுத்த காலத்திற்கு நேர் 3 காலங்கள் விந்நியாசம் செய்ய அதுதான் சௌகர்யம். இந்த சாதகங்கள் சிவராமனுக்குக் கச்சேரிகள் வாசிக்கும் போது உதவியாக இருந்தன. சிவராமனைப் போன்ற கடுமையான உழைப்பாளிகள் அரிது. இதை நேரில் நான் அனுபவித்த காரணத்தால் நான் தான் சொல்ல முடியும். அதனால் சொல்கிறேன்.

மைசூரில் ஒரு சமயம் வயலின் சௌடையா அவர்கள் நடத்தி வந்த சபாவில் நான் பாடினேன். ஆழகிரிசாமி அவர்கள் வயலின் சிவராமன் மிருதங்கம் “கமாலாம்பிகே” தோடி நவாரவர்ணக்கீர்த்தனை, கீர்த்தனையைப் போஷீத்து சிவராமன் வாசித்தான். கீர்த்தனை முடிந்ததும் ஸ்ரீ சௌடையா எழுந்து கீர்த்தனைக் காலப் பிரமாணத்தைப் பற்றியும் சிவராமன் வாசித்த அழகைப் பற்றியும் சந்தோஷித்துப் பேசினார்.

உள்ளுரில் எல்லாக் கச்சேரிகளுக்கும் கூடுமானவரை நான் உடன் செல்வேன். சிறுவயதிலேயே GNB, அய்யங்கார்வாள், ஆலந்தூர் சகோதரர்கள் போன்ற பெரிய வித்வான்களுக்கு வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. சமீபத்தில் மைசூர் துரைஸ்வாமி அய்யங்கார் வீணைக்கச்சேரியில் சிவராமன் வாசித்ததைக் கேட்டேன். நாராயண கௌளையில் “ஸ்ரீராமம்” என்ற கீர்த்தனையும், அதைத் தொடர்ந்த தனி ஆவர்த்தனமும் ஸ்வானுபூதியாக இருந்தன. இந்த நிலை வருவது கடினம். பாட்டில் தான் ஸ்வானுபூதி அனுபவம் உண்டு என்று அறிந்த நான், மிருதங்கம் வாசிப்பிலும் உண்டு என்பதை உணர்கிறேன். சிவராமன் அசுரசாதகி. அதி தீவிர மிருதங்க உபாசகன். உழைத்ததன் பலனை இன்று அனுபவிக்கிறான். சங்கீதம் சாதகம் செய்து அது பரிமளிப்பது ஈஸ்வரப் பிராப்தம். சிவராமன் விஷயத்தில் அது ஈடேறியது. என் பெரிய பையன் படிப்பிற்காக கல்லடைக்குறிச்சியிலிருந்து நான் சென்னை வந்தது, எனக்கு சிவராமன் தொடர்பு ஏற்பட்டது. எல்லாமே தெய்வ அனுக்ரஹம். கடுமையான உழைப்பு, ஞானம் எல்லாவற்றுடன், தெய்வ அனுக்ரஹம், பெரியவர்கள் ஆசீர்வாதங்கள் இவை எல்லாம் சிவராமனை நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் சிவராமனுக்கு எனது ஆசீர்வாதங்கள், தீர்க்க ஆயுசடன் இருந்து வாசிக்க எனது ஆசிகள்.

(Article written on Dr. Umayalpuram K Sivaraman’s completion of 50 Years of service to Carnatic Music)

Related