மிருதங்க வித்வான் உமையாள்புரம் பத்மஸ்ரீ K. சிவராமன் அவர்களுக்கு வயது 61 ஆகியுள்ளது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஸ்ரீ சிவராமன் ஒரு நல்ல அறிவாளியாகவும் மிருதங்கக் கலையில் நல்ல தேர்ச்சி பெற்று ஒரு B.A., B.L., பட்டதாரியாகவும் விளங்குகிறார். சட்டக்கல்லூரியில் படித்து வக்கீலாக ஆகாமல் சட்டபடி மிருதங்கக் கலைஞராக விளங்கி வருகிறார்.
நான் கும்பகோணத்தில் இருந்த காலத்தில், பாலனாகப் பார்த்த ஸ்ரீ சிவராமன்; இன்று உயர்ந்த ஸ்தானத்தை அடைந்த கலைஞனாக விளங்குகிறார்.
ஸ்ரீ சிவராமனது தந்தை Dr. காசி விசுவநாத அய்யர் சிவராமனது அபிலாஷை என்ன என்று உணர்ந்து, தனது குமாரனை உலகம் முழுவதும் பாராட்டும் ஒரு மிருதங்கக் கலைஞனாக உருவாக்கியுள்ளார்.
டாக்டர் அவர்களே நன்றாக பாடும் திறமை உள்ளவர். தனது குமாரனது பெருமைகளை தனது மனதோடு வைத்துக்கொண்டு வெளியே காட்டிக்கொள்ளாமல் நல்ல முறையில் வளர்த்து வந்ததற்கு, டாக்டர் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
தஞ்சை மாவட்டம் இசைக்கலை, நாட்டியம் லயவாத்யக்கலை, நாதஸ்வரக்கலை, மற்றும் பெரிய பெரிய அறிவாளிகளைக் கொண்ட ஸ்தலமாகும் என்பது வெளிப்படை.
இசைக்கலைக்கு முக்கியமான ஸ்தானத்தை அளித்த மஹனியர்களான வாக்கேயகாரரத்னங்கள். ஸத்குரு ஸ்ரீ தியாகப்ரம்மம், முத்துஸ்வாமி தீஷிதர், சியாமா சாஸ்திரிகள், சீர்காழி மூவர், கோபாலகிருஷ்ணபாரதியார் இவர்களுக்கு முன்பே திருஞான ஸம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் முதலான மஹான்களைப் பெற்றெடுத்த தெய்வத் தமிழ்நாடு ஆகும், நம் தமிழ்நாடு.
தமிழ்நாட்டின் தேசப்படத்தில் (map) ல் உமையாள்புரம் என்னும் சிற்றூருக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. இந்த ஊரில்தான் ஸத்குரு ஸ்ரீ தியாகப்ரும்மத்தின் நேர் சிஷ்யர்களான ஸ்ரீகிருஷ்ண பாகவதர், ஸ்ரீ சுந்தரபாகவதர் அவர்களது வழித்தோன்றல்களால் நமது ஸங்கீத mapல் முக்கிய இடம் வஹிக்கிறது எனலாம்.
இந்த ஊரில் வாழ்ந்த கடவாத்ய வித்வான் உமையாள்புரம் நாராயண அய்யர், அவரது குமாரர் மிருதங்கம், கடம், வாத்யங்கள் வாசித்து ப்ரபலமாக விளங்கிய கோதண்டராமய்யர், கடம் உமையாள்புரம் சுந்தரம் அய்யர் இவர்களையும் கலை உலகிற்கு அற்பணித்த ஊர் உமையாள்புரம்.
அதே உமையாள்புரத்தில் தோன்றிய ஸ்ரீ சிவராமனும் பாரத தேசம், மேல் நாடுகள் எல்லாவற்றிலும் தனது மேதாவிலாஸத்தை ப்ரகடனப்படுத்தி, நம் பாரத தேசத்திற்குப் பெருமையை வாங்கித் தந்த இசை மேதைகளில் ஒருவராக விளங்குகிறார்.
ஸ்ரீ சிவராமனது குருமார்கள் முறையை ஆறுபாதி நடேசய்யர், கும்பகோணம் சாக்கோட்டை ரங்கு அய்யங்கார், தஞ்சாவூர் வைத்யனாதய்யர், பாலக்காடு மணி அய்யர் இம்மஹா மேதைகளிடம் மிருதங்கலையைப் பயின்றதுடன், கல்லூரியில் பட்டப் படிப்பும் B.A., B.L., சட்டப் பிடிப்பும் படித்து சட்டபடி மிருதங்கம் வாசித்து வருகிறார்.
ஸ்ரீ சிவராமன் 10வது வயதில் மிருதங்கம் அரங்கேற்றம் தொடங்கி சென்ற 50 ஆண்டுகளாக மங்காத புகழுடன் விளங்குகிறார்.
இவரது இசைப்பணியை ஆண்டவனுக்கு அற்பணித்து வருகிறார். இசை உலகில் பெரிய வித்வான்கள், வேணுகானம் ஸஞ்ஜுவி ராவ் முதல் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் முதல் இன்று வரை உள்ள வித்வான்கள் எல்லோருக்கும் வாசித்து அனுபவம் கொண்டவர்.
முக்கியமாக சிவராமனிடம் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் கச்சேரியை டீம் ஸ்பிரிட்டுடன் பாடகருக்கு உதவியாக விதவிதமான ஸூநாதமயமான டேக்காக்களை வாசித்து கச்சேரியை சோபிக்கக் செய்யும் திறமையை பாராட்ட வேண்டும். தனி ஆவர்த்தம் வாசிப்பதில் புதுப்புது கோர்வைகள் மோராக்களுடன் வலந்தலை, அரை சாப்பு, முழுச் சாப்பு கொடுத்து இடந்தலை கும்கியும் கொடுத்து வாசிக்கும் திறமையைப் பாராட்டவே வேண்டும்.
மேலும் லய வித்தையைப் பற்றிய விளக்கங்களை ப்ரதர்சனம் செய்வது போற்றத்தக்கதாகும். மிருதங்கத்தில் மீட்டு, சாப்பு விரல்கள் சொற்களுக்கு விளக்கம் செய்து பிரமிக்கவே செய்கிறார். வட இந்திய தப்லா வித்வான்களுடன் ஜூகல்பந்தி நடத்தி அவர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு மேதையாவார்.
மிருதங்க வாத்யத்தின் அமைப்பு அதனைக் கையாள வேண்டிய விதம் இவைகளை நன்கு விளக்கும் திறமையாளராவார். ஆராய்ச்சித் துறையில் ஃபைபர்கிளாஸ் என்ற பொருளை மிருதங்கமாகச் செய்து விளக்கம் செய்து வருவது போற்றத்தக்கதாகும். மொத்தத்தில் பாட்டு, வீணை, பிடில் எல்லாவற்றிற்கும் அதனதன் தன்மையை மறைக்காமல் அடக்கி வாசிக்க வேண்டிய இடத்தில் அதன் நிலையைப் பொருத்து வாசிப்பவர் சிவராமன்.
தற்காலம் மிருதங்கக்கலை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதென்றே கூறலாம். அம்முறையில் மிருதங்கக் கலைஞர்களில் சிறந்து வளங்குபவர்களில் ஒருவராவர் நம் சிவராமன். இவர் பலபல பட்டங்களையும் காஞ்சி, சிருங்கேரி ஸமஸ்தானங்களில் ஆஸ்தான வித்வானாகவும் விளங்குகிறார். இவற்றிற்கெல்லாம் காரணம் ஸ்ரீ சிவராமனுக்கு தெய்வபக்தியும் தனது தந்தையிடமும், குருநாதர்களிடமும் மற்றும் பெரியோர்களிடமும் உள்ள பெரிய பக்தியும், நல்ல நடத்தையும் இவருக்குப் பெருமை மேலும் மேலும் அளித்து வருகிறது. ஸ்ரீ சிவராமன் மேலும் திடகாத்ரத்துடனிருந்து சதாபிஷேகமும், மேலும் ஒரு புருஷ ஆயுசுடனும் இருந்து கலைப்பணியைச் செய்து வர ஸ்ரீ அனந்த பத்மநாதப் பெருமான் அருள்பாலிப்பாராக.
இங்ஙனம்
செம்மங்குடி ரா. ஸ்ரீனிவாஸய்யர்
(Article written on Dr. Umayalpuram K Sivaraman’s completion of 50 Years of service to Carnatic Music)